வளர்ப்பு நாயை அடித்த நபர்,  மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை

தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயை இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென அடித்துள்ளார். நாயை அடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தடுத்துள்ளனர். 

ஆகஸ்ட் 20, 2023 - 19:57
வளர்ப்பு நாயை அடித்த நபர்,  மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த 45 வயதான நபர் ஒருவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வாளால் வெட்டி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்நகர் பகுதியில் வசிக்கும் திலீப் பவார் என்ற நபர் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயை இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென அடித்துள்ளார். நாயை அடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தடுத்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பவார், அவருடைய மனைவி கங்கா (வயது 40), மகன் யோகேந்திரா (வயது 14) மற்றும் மகள் நேஹாவை (வயது 17) வாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பிற்காக வீட்டை விட்டு வெளியே ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் பவார், தன்னையும் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 

முதல் கட்ட விசாரணையில், குடிப்பழக்கம் உள்ள பவார், இந்த சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், காலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!