சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்... கமிந்து மெண்டிஸ் அதிரடி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பிராட்மேனின் சாதனையை மெண்டிஸ் சமன்செய்து இருக்கின்றார்.

செப்டெம்பர் 28, 2024 - 10:48
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்... கமிந்து மெண்டிஸ் அதிரடி!

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி, தினேஷ் சண்டிமாலின் அபாரமான சதத்தின் மூலம், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மென்டிஸ் 51 ரன்களுடனும் தொடங்கினர். இதில் மேத்யூஸ் 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், களமிறங்கிய் கேப்டன் தனஞ்செய டி சில்வாவும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.

அத்துடன், அவருக்கு துணையாக விளையாடிய குசால் மெண்டிஸும் தனது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 22 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இப்போட்டியில் சதமடித்து அசத்திய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பிராட்மேனின் சாதனையை மெண்டிஸ் சமன்செய்து இருக்கின்றார்.

முன்னதாக டான் பிராட்மேன் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், கமிந்து மெண்டிஸும் தனது 13ஆவது இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்து அச்சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டிக்கு பிற்கு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் அரைசதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!