தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து தீக்ஷன விலகல்
உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இன்று இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இன்று இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் காயத்திலிருந்து மீண்டு வரும் சுழற்பந்துவீச்சாளர் தீக்ஷனா பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இலங்கை அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் பேசியதாவது: தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து தீக்ஷனா மீண்டு வருகிறார். இதன் காரணமாக, இந்த ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார். இருப்பினும் விரைவில் அவர் அணியுடன் இணைவார் என நம்புகிறோம். அணியில் மற்ற அனைவரும் உடற்தகுதியுடன் உள்ளார்கள் என்றார்.
ஆசியக் கோப்பையில் தீக்ஷனாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
ஏற்கெனவே காயம் காரணமாக ஹசரங்கா அணியில் இடம்பெறவில்லை. இதனால் சுழற்பந்துவீச்சுப் பொறுப்பு துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்செயா டி சில்வாவிடம் சென்றுள்ளது. லெக் ஸ்பின்னரான துஷன் ஹேமந்தா விளையாடும் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பையில் கவனம் ஈர்த்த துனித் வெல்லாலகே குறித்து பயிற்சியாளர் சில்வர்வுட் பேசியதாவது:
தான் எவ்வளவு சிறந்த இளம் வீரர் என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தியுள்ளார். அவர் மீது மூத்த வீரருக்கு இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர் முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். பந்துவீச்சு, பேட்டிங் மட்டும் அல்லாது அவர் சிறந்த ஃபீல்டரும் கூட.
நாங்கள் அவருக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கப் போவதில்லை. அவர் தனக்கே உரித்தான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாடி உலகத்திற்கு தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் இன்னும் அவர் மேம்படுவார் என்றார்.