சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு இணங்காத நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பு வழங்க மறுத்தால் அந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு வேறும் முதலீட்டாளர்களிடம் தோட்டங்கள் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1350 ரூபாயாக உயர்த்தவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாயை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட உள்ள நிலையில், பெருந்தோட்ட நிறுவனமொன்று சம்பளத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தால் அது குறித்து விசாரணை செய்ய நிதி அமைச்சு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.