3 நாட்கள் ஓய்வில்லாமல் ஓடப்போகும் இந்திய வீரர்கள்.. ஜெய் ஷாவால் சிக்கிய ரோகித் சர்மா!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
செப்.2 நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடப் போகும் போட்டிக்கும், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் "ரிசர்வ் டே"வை ஏசிசி அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.
இதனால் மழை சீக்கிரம் நிற்கும் என்று காத்திருந்த நடுவர்கள், மழை நின்ற பிறகும் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஆடுகளத்தை பரிசோதனை செய்து வந்தனர்.
பின்னர் மழையால் மைதானம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை சரி செய்து ஆட்டம் தொடங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று "ரிசர்வ் டே" வில் தொடரும் என்று அறிவித்தனர். இதனால் 24.1 ஓவர்களில் இருந்து ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்து 2 நாட்களில் இந்திய அணி விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாளை இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக 3 நாட்கள் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு திடீரென ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த ரிசர்வ் டே அறிவிப்பே காரணமாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்திய அணி வீரர்கள் ஓய்வில்லாமல் விளையாடவுள்ளனர். இதனிடையே எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் இந்திய அணி மேலும் சிக்கலில் சிக்கும்.
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழலில், இந்திய அணி வீரர்கள் ஓய்வில்லாமல் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயத்தில் இருந்து நீண்ட ஓய்வுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளனர். தற்போது அவர்கள் தொடர்ச்சியாக 3 நாட்கள் பரபரப்பான கிரிக்கெட்டை விளையாடினால் காயமடைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.