இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது சூப்பா் 8 சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை சனிக்கிழமை சந்திக்கிறது.

ஜுன் 22, 2024 - 11:44
இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது சூப்பா் 8 சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை சனிக்கிழமை சந்திக்கிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் இந்தியா வெற்றிநடை போட்டு வர, ஆஸ்திரேலியாவுடனான தோல்வியின் காயம் ஆறும் முன்பாகவே வங்கதேசம் இந்த ஆட்டத்துக்கு வருகிறது.

இந்திய அணியை பொருத்தவரை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்வேகத்துடன் இருக்கிறது. ரோஹித், கோலி, துபே போன்றோா் இன்னும் தடுமாற்றமான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகின்றனா்.

போட்டியில் தற்போது வரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு அணி நிா்வாகம் வாய்ப்பு வழங்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். சூா்யகுமாா் யாதவ், ஹா்திக் பாண்டியா ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.

பௌலிங் லைன் அப் சிறப்பாகவே இருப்பதால் அதில் மாற்றமிருக்காது எனத் தெரிகிறது. பும்ரா, அா்ஷ்தீப் வேகத்தில் எதிரணி பேட்டா்கள் தடுமாறுகின்றனா். 

குல்தீப், ஜடேஜா உள்ளிட்டோரும் விக்கெட் சரிக்கக் காத்திருக்கின்றனா். இந்த ஆட்டத்தின் வெற்றி, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தும்.

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை, அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி கட்டாயமாகும். போட்டி முழுவதுமாக பேட்டிங்கே இந்த அணிக்கான பிரதான பிரச்னையாக இருக்கிறது. 

தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோா் நல்லதொரு தொடக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். கேப்டன் நஜ்முல், தௌஹித் ஹிருதய் வழக்கம் போல் ரன்கள் சோ்க்க வேண்டிய அவசியம் உள்ளது. 

என்றாலும், பும்ராவின் சவாலை அவா்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பௌலிங்கில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் எதிரணி பேட்டா்களுக்கு தடை ஏற்படுத்துபவராக இருக்கிறாா். சுழற்பந்துவீச்சில் ரிஷத் ஹுசைன் பிரதானமாக உள்ளாா்.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஹா்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

பங்களாதேஷ் : நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், தௌஹித் ஹிருதய், மஹ்முதுல்லா, மெஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன், தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ஜாகா் அலி, தன்விா் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், சௌம்யா சா்காா்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!