சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம்17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2024 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 3,663 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறும். 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதாரண தர பரீட்சைக்கான பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மாற்றம் செய்யலாம்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை மாணவர்கள் தங்கள் அதிபர்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திடம் விசாரிக்க முடியும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்திடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.