நாட்டின் கடற்பகுதிகளில் ஆமை, டொல்ஃபின்களுக்கு ஆபத்து
கடலோரப் பகுதிகளுக்குச் சென்றபோது சில ஆமைகளின் உடல்கள் ஏற்கெனவே அழுகிய நிலையில் இருந்தமையால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் கடற்பகுதிகளில் ஆமைகள் மற்றும் டொல்ஃபின்கள் போன்ற கடல் பாலூட்டிகள் இறப்பதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீன்பிடிப்பதற்காக “bottom trawling” எனும் சட்டவிரோத முறையை கடைபிடிப்பதால் கடல் பாலூட்டிகள் உட்பட அனைத்து மீன்களும் கொல்லப்படுவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் மேற்கு கரையோரப் பகுதியில் வாரம் ஒன்றுக்கு 10 ஆமைகளின் சடலங்களை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
அவற்றின் மீது வன விலங்கு கால்நடை மருத்துவர்களால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுவாசிப்பதில் சிரமம், காயங்கள் மற்றும் பாரியளவில் உடல் சேதமடைந்ததால், இந்த ஆமைகள் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடலோரப் பகுதிகளுக்குச் சென்றபோது சில ஆமைகளின் உடல்கள் ஏற்கெனவே அழுகிய நிலையில் இருந்தமையால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
சட்டவிரோத மீன்பிடி முறைகள், கடல் ஆமைகளை காயப்படுத்துவது மற்றும் கொல்வது மட்டுமல்லாமல், டொல்ஃபின்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.
எனவே, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், கடல் பாலூட்டிகளைப் பாதுகாப்பதற்காக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும், பொதுமக்களிடம் வன ஜீவராசிகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.