கருடன் விமர்சனம்: என்னவொரு வெறித்தனம்.. மிரட்டும் சூரி!
கருடன் விமர்சனம்: யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கருடன் படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருடன் விமர்சனம்
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கருடன் படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதி மற்றும் கர்ணா கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நண்பர்களாக நடித்துள்ளனர். யாரும் இல்லாத அநாதையாக அந்த ஊருக்கு வரும் சொக்கன் சூரிக்கு உணவு மற்றும் தங்க இடம் கொடுத்து பார்த்துக் கொள்கிறார் உன்னி முகுந்தன். அவருக்கு எப்போதுமே விசுவாசமாக சூரி இருக்கிறார்.
இப்படி இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்க இவர்களுக்கு சொந்தமான கோயில் இடத்தை அபகரிக்க அமைச்சராக நடித்துள்ள ஆர்.வி. உதயகுமார் திட்டம் தீட்டி சமுத்திரகனி மூலம் சதி வலை பின்னுகிறார்.
அதன் விளைவாக நண்பர்களுக்கு இடையே பகை வெடிக்கிறது. அதில், சிக்கிக் கொள்ளும் சூரி இந்த கதையில் என்ன செய்கிறார் என்பது தான் இந்த கருடன் படத்தின் கதை. வெற்றிமாறன் பட்டறையில் சூரி நல்லாவே பட்டைத் தீட்டப்பட்டுள்ளார் என்பது அவரது நடிப்பை பார்த்தாலே தெரிகிறது.
விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததை போலவே சூரி இந்த படத்தில் விசுவாசியாக ஒரு நாயை போல நன்றியுள்ளவராக நடித்து தனது நடிப்பு அசுரனை வெளியே கொண்டு வருகிறார். ப்ரீ கிளைமேக்ஸில் சூரி ஆக்ரோஷமாக சண்டையிட்டு எதிரிகளை அழிக்கும் காட்சிகள் எல்லாம் அசுரத்தனம்.
சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ஆர்.வி. உதயகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்ற உதவியுள்ளனர். காதல் காட்சிகளில் சூரி விடுதலை படத்தை போலவே இங்கேயும் சிறிது தடுமாறுகிறார். ஆனால், நன்றி விசுவாசத்தை காட்டும் இடங்களிலும் ஹீரோவாக உச்சம் தொடும் இடங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
கோயில் நிலத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் கருடனாக சூரி வானில் பறக்கிறார். அடுத்து விடுதலை 2, கொட்டுக்காளி படங்களும் சூரிக்கு ஹீரோவாக மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என தெரிகிறது.
மொத்தத்தில் கருடன் – கம்பீரம்!