உலகக்கோப்பை 2023 - டிராவிட், ரோஹித் இருந்தும் அதே தப்பு எப்படி நடந்தது? சிக்கலில் இந்திய அணி!
உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மட்டும் தான் ஒரே ஒரு இடத்திற்கு சிறப்பாக ஆடும் வீரரை ஆறு ஆண்டுகளாக தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே, ஒரு உலகக்கோப்பை தொடர் வெற்றி இதனால் பறிபோயுள்ளது. தற்போது மீண்டும் அதே நிலைமைக்கு அணியைக் கொண்டு வந்து விட்டுள்ளனர் தற்போது பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி.
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக தோனி விலகிய பின்தான் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் யார் என்ற சிக்கல் தொடங்கியது.
2011 உலகக்கோப்பை தொடருக்கு பின் யுவராஜ் சிங் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை தான் உடல்நிலை காரணமாக இழந்தது முதலே அந்த இடத்தில் நிலையான பேட்ஸ்மேன் யாரும் ஆடவில்லை.
ஆனால், தோனி இருந்தவரை இந்த விவகாரம் பெரிதாகவில்லை. அப்போது முதல் தற்போது வரை அம்பத்தி ராயுடு, மனீஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் என இந்திய அணியின் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக ஆடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், இப்போதும் இது பேசுபொருளாக இருப்பதுதான் வேதனை.
இந்த பிரச்சனை 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன் பெரிதாக வெடித்தது. அப்போது அம்பத்தி ராயுடுவை தான் அந்த இடத்தில் விளையாட வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு உத்தேச அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. அந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங்கில் நான்காம் இடம் குறித்த விவாதம் எழுந்து, இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது.
அதன்பின் பிசிசிஐ தலைவர் ஆன கங்குலி நேரடியாக இதை தீர்க்க முடியாமல், அணியின் டிராவிட்டை நியமித்தார். அதற்கே பெரும் போராட்டம் ஆனது. காரணம், கேப்டன் விராட் கோலி செய்த சில செயல்கள் தான்.
ஒரு வழியாக கேப்டனாக ரோஹித் சர்மா, பயிற்சியாளராக டிராவிட் என இந்திய அணி நிலைத்தன்மையை எட்டிய போது 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரே வந்துவிட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே இதுவரை நான்காம் இடத்தில் சிறப்பாக ஆடி இருக்கிறார்.
ஆனால், அவர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ஆடவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
இப்போது சூரியக்குமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், கே எல் ராகுல், இஷான் கிஷன் என அந்த இடத்தில் ஆட நான்கு பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மறுபுறம், முன்னாள் பயிற்சியாளரும், கோலியின் "நம்பிக்கை நாயகனுமான" ரவி சாஸ்திரி, விராட் கோலியை தான் அந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என சமீப காலமாக கூறி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
2019 உலகக்கோப்பையில் எந்த தவறை இந்திய அணி செய்ததோ அது மீண்டும் எட்டிப் பார்க்கிறது. என்ன செய்யப் போகிறார்கள் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா?