மைத்திரிபாலவின் வாக்குமூலம்; அடுத்து நடப்பது என்ன? - முழுமையான விவரம்
முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களை தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று (25) 6 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பற்றி தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பான ரகசிய தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் வைத்து அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அந்த அறிக்கையின் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை அழைத்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதன் பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் மங்கள தெஹிதெனிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை தம்மிடம் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
அந்த அறிவிப்பின்படி, நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வந்த போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக திரண்டிருந்தனர். (News21)