இலங்கை அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்க!

இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.  

ஆகஸ்ட் 3, 2024 - 10:24
இலங்கை அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்க!

கொழும்பில் நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.  

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் ஷுப்மன் கில் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் இணைந்து பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

பின் கேஎல் ராகுல் 31 ரன்னிலும், அக்ஸர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த ஷிவம் தூபே 25 ரன்களுக்கும், அர்ஷ்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரனக்ளுக்கு ஆல் அவுட்டானது.  இலங்கை அணி தரப்பில் கேப்டன் சரித் அசலங்க, வநிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய துனித் வெல்லாலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதனையடுத்து போட்டி முடிவுக்கு பின் பேசிய இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க, “எங்களால் இந்த இலக்கை வைத்து எதிரணியை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினோம். நாங்கள் எண்ணியதைப் போலேவே செய்தும் காட்டியுள்ளோம். 

அசலங்க, ஹசரங்க அசத்தல்; டை-யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!

இருப்பினும் எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த மைதானத்தில் பகலில் பேட்டிங் செய்வதை விட இரவில் பேட்டிங் செய்வது எளிதாக மாறிவிட்டது.

ஆனால் இடதுகை பேட்டர்கள் பேட்டிங் செய்யும் போது பந்து அதிகளவு திரும்பியதை கவனித்தேன். அதனால் இப்போட்டியில் நான் பந்துவீசலாம் என்று நினைத்தேன். அது எங்களுக்கு உதவியது. 

அதேபோல், களத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதுடன் அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பேட்டிங்கில் வெல்லாலகே மற்றும் நிஷங்க ஆகியோர் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!