அசலங்க, ஹசரங்க அசத்தல்; டை-யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தோடரில் விளையாடிவருகிறது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
மேலும் போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகமது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - அவிஷ்க ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அவிஷ்க ஃபெர்னாண்டோ ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீர சமரவிக்ரம 08 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்க தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த பதும் நிஷங்கவும் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜனித் லியனகே - துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஒருகட்டத்தில் ஜனித் லியனகே 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்காவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த துனித் வெல்லாலகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்,
இதில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதேசமயம் மறுமுனையில் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில், 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் 5 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய அணி 87 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இணைந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
பின் 24 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, 23 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 31 ரன்களிலும், அக்ஸர் படேல் 33 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் அச்சமயத்தில் இந்திய அணியும் 230 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை சமன்செய்திருந்தது. அதன்பின் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கும் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சரித் அசலங்க மற்றும் வநிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் இப்போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போட்டியின் முடிவானது டை ஆனதாக அறிவிக்கப்பட்டது.