கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நோயாளர்கள்
இது மருந்தில் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். எனவே, சம்பவம் தொடர்பில் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ப்ரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் சிக்கல்களை உருவாக்கிய 13 கண் நோயாளர்களை சுகாதார அமைச்சகம் இதுவரை கண்டறிந்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ விநியோக பிரிவு பணிப்பாளரான வைத்தியர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த நோயாளர்களில் இரண்டு நோயாளர்களின் பார்வை குறைந்துள்ளது, ஏனையவர்களின் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 10 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தேசிய கண் வைத்தியசாலையில் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது மருந்தில் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். எனவே, சம்பவம் தொடர்பில் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட மருத்துவமனைகளில் கண் அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு மருத்துவமனையிலிருந்தும் மருந்தின் முழு அளவையும் திரும்பப் பெறுவதற்கான விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதுபோன்ற சிக்கல்களுடன் புதிய நோயாளர்கள் கண்டறியப்படுவது தொடர்பில் எங்களுக்குத் தெரிவிக்க அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்” எனவும் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.