அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்ய சவுதி அரேபியா ஒப்புதல்
சவுதி அரேபிய மன்னர் சல்மான் (88) உடல்நலம் காரணமாக நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் (88) உடல்நலம் காரணமாக நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அவர் அரசுமுறை பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றார். ரியாத்–வாஷிங்டன் உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்புடன் இளவரசரை வரவேற்றார். பின்னர் ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், எப்–35 போர் விமானங்கள் விற்பனை, அமெரிக்காவில் பெரும் அளவு முதலீடு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், டிரம்ப், “அமெரிக்காவில் ரூ.53 லட்சம் கோடி (600 பில்லியன் டாலர்கள்) முதலீடு செய்ய சவுதி ஏற்கனவே ஒப்புக்கொண்டது. தற்போது இது உயர்த்தப்பட்டு, மொத்தம் ரூ.88 லட்சம் கோடி (1 டிரில்லியன் டாலர்கள்) முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மேலும் வலுப்படும்” என்றார்.
ஜமால் கஷோகி படுகொலை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த டிரம்ப், “அந்த சம்பவத்துடன் இளவரசருக்கு தொடர்பு இல்லை. அதை அப்படியே விட்டுவிடுங்கள்” என்று கூறினார். 2018ல் இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் கஷோகி உயிரிழந்த சம்பவத்தில் இளவரசரின் தொடர்பு குறித்து சர்ச்சை நிலவுகின்றது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், “அமெரிக்காவின் ‘இரட்டை கோபுர’ தாக்குதலில் பின்லேடன் சவுதி மக்களை தவறாக பயன்படுத்தினார். பயங்கரவாதம் அமெரிக்கா–சவுதி உறவுகளை பாதித்தது. இனிமேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாதவாறு இருநாடும் இணைந்து செயல்படும். விரைவில் அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.