பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: முழு விவரம்
புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.
பிரித்தானியாவில் தஞ்சம் வழங்கப்பட்ட அகதிகள் இனி 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் திங்கட்கிழமை அறிவிக்க உள்ள புதிய சீர்திருத்தத் திட்டங்கள், சிறிய படகுகளில் வருவோரின் எண்ணிக்கையையும் தஞ்சக் கோரிக்கைகளையும் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
தற்போதைய விதிகளின்படி, அகதிகளுக்கு வழங்கப்படும் தஞ்ச அந்தஸ்து ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும்; அதன் பின்னர் அவர்கள் நிரந்தரத் தங்குதடைக்கு (Indefinite Leave to Remain) விண்ணப்பிக்கலாம். ஆனால் புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும். ஒருவரின் சொந்த நாடு பாதுகாப்பானதாக மதிப்பிடப்படும் சூழலில், அவர்களை UK-யிலிருந்து திருப்பி அனுப்ப உத்தரவிடப்படும்.
நிரந்தரத் தங்குதடைக்கு விண்ணப்பிக்க தேவையான மொத்த காலம் தற்போது உள்ள ஐந்து ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!
இந்த மாற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் Sunday Times-க்கு பேசிய ஷபானா மஹ்மூத், "சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் இந்த நாட்டுக்கு வர வேண்டாம், படகுகளில் ஏற வேண்டாம் என்பதைக் கூறுவதே இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "சட்டவிரோத குடியேற்றம் நம் நாட்டை பிளவுபடுத்துகிறது; இதை சீர்செய்யாவிட்டால் பிரித்தானியா மேலும் பிரியும்," என்று அவர் எச்சரித்தார்.
புதிய கொள்கை டென்மார்க் பின்பற்றிய முறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு ஆண்டு காலத்துக்கு தற்காலிக தஞ்ச அனுமதி வழங்கப்பட்டு, காலாவதியானதும் அகதிகள் மீண்டும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மஹ்மூத்தின் புதிய அணுகுமுறை தொழிற்கட்சியின் சில எம்பிக்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிபரல் டெமோக்ராட் கட்சியின் உள்துறை விவகார பேச்சாளர் மெக்ஸ் வில்கின்சன், "டோரிகள் உருவாக்கிய குழப்பமான தஞ்சக் கோரிக்கை அமைப்பைச் சீர்படுத்த புதிய வழிகளை அரசு ஆராய்வது சரியானதே" என்றாலும், விண்ணப்பங்களை வேகமாக செயலாக்கும் திறனை மேம்படுத்தாமல் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்காது என்று எச்சரித்தார்.
Refugee Council அமைப்பின் தலைமை நிர்வாகி என்வர் சாலமன், அரசின் திட்டங்களை "கடுமையானதும் தேவையற்றதுமானது" என்று விமர்சித்தார். மேலும், துன்புறுத்தப்பட்டோர், சித்திரவதை செய்யப்பட்டோர், போர்களில் குடும்பத்தினரை இழந்தோர் போன்றவர்களை இந்த மாற்றங்கள் எவ்விதத்திலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.