அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு எதிர்ப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வருடத்துக்கு அதிகரிக்கப்படும் சம்பள அதிகரிப்பின் அளவு 350க்கும் 400 ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகையாகும்.

டிசம்பர் 28, 2023 - 13:33
அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு எதிர்ப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வை குழுவின் பரிந்துரைக்கு அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் அமில பண்டார தெரிவிக்கையில், “அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் வருடத்துக்கு 45 நாட்கள் என்ற விடுமுறை எண்ணிக்கையை 25 நாட்களாக குறைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை முன்வைத்திருக்கிறது. இதனை எமது சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

அரச சேவையில் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரச ஊழியர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கும்  வகையில் விடுமுறை தினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், அரச ஊழியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்றனர். குறிப்பாக பாரிய வரி சுமையை சுமக்க வேண்டி இருக்கின்றனர். அதேநேரம் 2016ஆம் வருடத்துக்கு பின்னர் அரச சேவையில் இணைந்துகொள்பவர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது நிலவும் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ற சம்பளம் அரச ஊழியர்களுக்கு இல்லை. வருடத்துக்கு அதிகரிக்கப்படும் சம்பள அதிகரிப்பின் அளவு 350க்கும் 400 ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகையாகும்.

இதையும் படிங்க: இலங்கையில் புதிய கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

ஏற்கெனவே அரச ஊழியர்களுக்கு இருந்தவந்த சொத்துக்கடன் வழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதுடன் விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தவணை குறைப்பின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பரீட்சை நடத்தி வழங்கிவந்த தர உயர்வு வழங்கும் முறை நீக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில், அரச சேவையில் இருப்பவர்களின் விடுமுறையை குறைப்பதற்கு கொண்டுவந்திருக்கும் பிரேரணைக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஓய்வுபெறும் அதிகாரிகளின் ஓய்வூதிய பணிக்கொடை ஒருவருடம் செல்லும்வரை செலுத்துவதை தாமதித்திருக்கிறது.

இவ்வாறு பல பிரச்சினைகள் அரச ஊழியர்களுக்கு இருந்துவரும் நிலையில் இவற்றுக்கு தீர்வுகாண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!