பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் அபாயம்

ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Mar 6, 2023 - 13:31
பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் அபாயம்

60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததால் நீண்ட தூர சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில்கள் பல தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும் முடிவால் பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படாத காரணத்தினால், 60 வயதுக்கு மேற்பட்ட 20க்கும் மேற்பட்ட ரயில் சாரதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக அநுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பதுளைக்கு இயக்கப்படும் பல தொலைதூர சேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் போக்குவரத்து ரயில்கள், 2 சரக்கு ரயில்கள் மற்றும் திருகோணமலைக்கு இயக்கப்படும் கோதுமை மா போக்குவரத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் பணியாற்றிய சாரதி ஓய்வு பெற்ற பின்னர் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள நிலையில், வரும் காலத்துக்கான சம்பளம் வழங்குவது குறித்து முடிவெடுக்காததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்த கோரிக்கையின்படி, ரயில்வே சேவையை நடத்துவதற்கு அத்தியாவசியமான 63 வயதுக்குட்பட்ட ஊழியர்களை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பொதுச் சேவை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், 60 முதல் 63 வயதுக்குட்பட்ட நான்கு ரயில் சாரதிகளே நீண்ட தூர சேவை ரயில்களை இயக்குவதாகவும், பெரும்பாலானோர் 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்