பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தை பிறப்பு அதிகரிப்பு – பெண் கருக்கலைப்பு சந்தேகம்!
இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது தொடர்பான அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்யும் சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில், 2017 முதல் 2021 வரையான காலகட்டத்தில் இந்திய வம்சாவளியினருக்குப் பிறந்த 15,401 குழந்தைகளில், 100 பெண் குழந்தைகளுக்கு நேர் 113 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார மேம்பாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அலுவலகம் (Office for Health Improvement and Disparities) மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
சாதாரணமாக, உலகளாவிய இயற்கை பிறப்பு விகிதம் 100 பெண்களுக்கு 103–107 ஆண்கள் என்ற அளவில் இருக்கும். பிரித்தானியர்களின் இந்த விகிதம் 105.4 ஆக இருந்தது – இது எதிர்பார்க்கத்தக்கது. ஆனால், இந்திய வம்சாவளிக்கு 113 என்பது சாதாரண வரம்பை விட நிறைய அதிகம்.
இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் சுமார் 400 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு மூலம் பிறக்க தடுக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், குழந்தையின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம். சுகாதாரம் மற்றும் சமூக அக்கறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இது குற்றமாகும். மருத்துவர்கள் அல்லது யாரேனும் இத்தகைய செயலில் ஈடுபட்டால், அது குறித்து உடனடியாக காவல்துறையில் புகாரளிக்க வேண்டும்" என தெளிவுபடுத்தியுள்ளார்.