ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் பிறந்த குழந்தை!
"முக்கியத் தருணங்களில் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது," என்று நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா - சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.
Waymo நிறுவனத்தின் தானியங்கி டாக்சியில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோதே, அவருக்கு டாக்சியில் வைத்து குழந்தை பிறந்துவிட்டது.
டாக்சியில் செல்லும் பெண்ணுக்கு மருத்துவப் பிரச்சினை இருப்பதை Waymo நிறுவனத்தின் ஊழியர்கள் அறிந்தனர். உடனே அவர்கள் பெண்ணைத் தொடர்பு கொண்டனர். அவசரச்சேவை மருத்துவ ஊழியர்களுக்கும் பெண்ணின் நிலைமை குறித்து தகவல் வழங்கினர்.
தாயையும் சேயையும் டாக்சி பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் குழந்தை பிறந்தது முதன்முறையல்ல என்று Waymo நிறுவனம் தெரிவித்தது.
"முக்கியத் தருணங்களில் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது," என்று நிறுவனம் மேலும் தெரிவித்தது.