85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, அமெரிக்கா வெளிநாட்டவர்களின் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவை “மீண்டும் பாதுகாப்பானதாக” மாற்றுவதற்கான அவரது தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்த ஆண்டு வழங்கப்பட்ட விசா ரத்துகள் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட விசாக்களில், 8,000க்கும் மேற்பட்டவை மாணவர் விசாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளில் பாதி அளவுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல்கள், திருட்டுகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களும் ஆவர். “இவர்கள் நம் சமூகங்களுக்கு நேரடியான அபாயத்தை உருவாக்குபவர்கள். அவர்களை நாம் விரும்பவில்லை,” என அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விசா வழங்குவதில் தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் மதிப்பிடாமல், விண்ணப்பதாரரின் முழுமையான பின்னணி, சமூக தொடர்புகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கவனமாக மதிப்பீடு செய்வதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஒரு விண்ணப்பதாரர் அமெரிக்க பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதி செய்யப்படும் வரை விசா வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்குத் தேவையான அனைத்து நேரத்தையும் எடுத்துக்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.