சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை!

மேலும் "மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025" மூலம் கூடுதல் விடுமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

டிசம்பர் 9, 2025 - 16:11
டிசம்பர் 9, 2025 - 16:51
சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை!

பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவதை கட்டாயமாக்கும் கர்நாடக அரச அறிவிப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை (09) இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்தது.

பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த அவிராட்டா ஏஎஃப்எல் இணைப்பு அமைப்புகள் லிமிடெட் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்கள் மீது நீதிபதி ஜோதி, இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். 

"மாதவிடாய் சுழற்சியின் போது விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலன் தொடர்பான எந்த தனிச்சட்டமும் இல்லை. எனவே, பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பின் மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை" என்ற வாதத்தை, மனுதாரர் தரப்பு முன்வைத்தது.

மேலும் "மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025" மூலம் கூடுதல் விடுமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனையடுத்து அரசின் ஆணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிபதி ஜோதி, மாதவிடாய் விடுமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

கர்நாடக அரசின் அறிவிப்பு

அரச, தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் நிரந்தர, ஒப்பந்த, வெளிகுத்தகை உள்பட எந்த ரீதியில் பணியாற்றினாலும் 18 முதல் 52 வயது வரையிலான அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ஒரு மாதவிடாய் விடுமுறை உண்டு. இந்த விடுப்புக்கு சம்பளம் வழங்கப்படும். 

வருடத்திற்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை. ஆனால், அந்தந்த மாத விடுமுறைகளை அந்த மாதங்களிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்து வைத்து எடுக்கக்கூடாது. இதற்கு எந்த மருத்துவ சான்றிதழும் சமர்பிக்க தேவையில்லை எனவும் உத்தரவிடப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!