தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிந்து 25 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.

புதூர் பாண்டியாபுரத்தில் இயங்கி வரும் ”நிலா கடல் உணவுகள்” என்ற தனியார் மீன் பதன ஆலை செயல்பட்டு வருகிறது. அதில் இருந்த கேஸ் சிலிண்டர் நேற்று இரவு 11 மணியளவில் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டு அங்கிருந்த ஊழியர்களில் 25 பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மயக்கமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கம்போல் வேலை நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்கச்வு ஏற்பட்டதாகவும், அதனால் கேஸ் சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளூர் பெண்கள் மட்டுமின்றி, அங்கு பணியாற்றி வந்த வெளிமாநில பெண்கள் சிலரும் அடங்குவர் என கூறப்படுகிறது.
விபத்துக்கான சரியான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே ஆலையில்,கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 50 பேர் பாதிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமோனியாவை அதிக அளவில் சுவாசித்தால் மூச்சுத்திணறல் உண்டாகும். தொடர்ந்து சுவாசிக்க வேண்டியது ஏற்பட்டால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்க நேரிடும் என்பது கவனிக்கத்தக்கது.