உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள்
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமுதி பாஷானி முனசிங்க உயிரியல் பாடப்பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிதினி தில்சராணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த கோனதுவாகே மனேத் பானுல பெரேரா பௌதீகவியல் (கணிதம்) பாடத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
கொழும்பு தேவி பாலிகா கல்லூரியைச் சேர்ந்த ருச்சினி அஹிம்சா விக்ரமரத்ன தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞானம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194 ஆவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதனிடையே, 2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 59 பாடசாலை விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், 25 தனியார் விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கும் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் வரும் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 63,933 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 32,797 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இது 63.13 சதவீதம் ஆகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.