டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
விடுமுறை தினம் மற்றும் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
விடுமுறை தினம் மற்றும் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர், கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த துயர சம்பவம் குறித்து கூறுகையில், " டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
டெல்லி துணை நிலை கவர்னர் தனது எகஸ் பதிவில், " டெல்லி ரயில் நிலையத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளேன். உடனடியாக நிலைமை குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.