காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது

குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

டிசம்பர் 18, 2025 - 10:45
காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது

சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை மிகிந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த துன்புறுத்தலுக்கு உள்ளான காட்டு யானை, மிகிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீப்புகுளம பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

யானையின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் காணப்பட்ட நோய் நிலைமைகளுடன், தீக்காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியும் மரணத்திற்கான காரணங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காட்டு யானைக்கு தீ வைத்து மிருக வதை செய்த குற்றச்சாட்டின் கீழ், அதே பகுதியைச் சேர்ந்த 42, 48 மற்றும் 50 வயதுடைய மூன்று பேர் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (18) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!