இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முழுமையாக நடக்குமா? கொழும்பு வானிலை என்ன?
ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பின் இளம் வீரர் இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை மீட்டனர்.
இவர்களின் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி 266 ரன்களை சேர்த்தது. இஷான் கிஷன் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யவே களமிறங்கவில்லை.
அந்த அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன.
இந்தியா கூட படைக்காத சாதனை.. பங்களாதேசத்தை வீழ்த்தி சாதித்த இலங்கை.. வெறித்தனம் காட்டிய பதிரன!
இந்த நிலையில் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிகள் கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொழும்புவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
வியாழக் கிழமை வரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் என்று எந்த அணி வீரர்களாலும் ஆடுகளத்தில் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.
இதனால் அனைவரும் உள்விளையாட்டு அரங்கிலேயே பயிற்சியில் ஈடுபட்டனர். இதன்பின் வெள்ளிக்கிழமையன்று ஓரளவிற்கு மழை குறைந்தது.
இதன்பின் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மழை குறுக்கீடே இல்லை.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டியின் போது 70 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஆட்டத்திற்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆட்டம் நிச்சயம் முழுமையாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருந்தால் முதலில் பந்துவீசும் அணிக்கே சாதகம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் மட்டுமல்லாமல் ஆட்டத்தின் வெற்றி தோல்வியிலும் வானிலையின் பங்கு முக்கியத்துவம் பெறும்.
அதேபோல் கடந்த ஒரு வாரமாக மழை பெய்துள்ளதால், முதல் 15 ஓவர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.