கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன - மனோ எம்.பி

நாட்டை விட்டு வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது

ஜுலை 7, 2023 - 01:14
கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன - மனோ எம்.பி

பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ஆவது திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம் ஆகியன பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மனோ கணேசன் எம்.பி, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று (06) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல் மற்றும் கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். 

“இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது” மேற்படி எம்.பிக்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!