அரச ஊழியர்களுக்கு இரு முக்கிய அறிவிப்புகள்!
வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு இரு முக்கிய அறிவிப்புகளை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதாவது, வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, அரச ஊழியர் ஒருவருக்கு தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக, 7,800 ரூபாயுடன், 5,000 ரூபாய் சேர்த்து, 12,800 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஏப்ரல் மாதம் முதல் வாழ்க்கைச் செலவான 12,800 ரூபாயுடன், ரூ.5,000 சேர்த்து 17,800 ரூபாய் வழங்கப்படும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஆதரவற்றோர் ஓய்வூதிய பங்களிப்பாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 8 சதவீதம் அறவிடப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாய கடமை நேரமும் கட்டுப்பாடுகளும்
அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.
பணியின் போது தனது அலுவலக அடையாள அட்டையை அணிந்துகொள்வதுடன், சீருடை உதவித்தொகை பெறும் அனைத்து அரச அலுவலர்களும் தங்களது சீருடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.