வைத்தியசாலைகளில் களமிறங்கிய இலங்கை இராணுவத்தினர்
வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகள் இன்றி மருத்துவமனை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் உதவி கோரியுள்ளது.

72 சுகாதார தொழிற்சங்கங்களினால் அரசாங்க வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை இராணுவம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அரசாங்க வைத்தியசாலைகளில் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரை நிலைநிறுத்தியுள்ளது.
வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகள் இன்றி வைத்தியசாலை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் உதவி கோரியுள்ளது.
இதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் கீழ் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹமோதர, பேராதனை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினர் வரவழக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை , மீரிகம, ஹோமாகம, கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்காக படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க இராணுவத்தினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலைகயின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 700 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் மேலதிக படையினரை அனுப்புவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு இராணுவத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளார். (News21)