மீண்டும் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவை
ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனநாயக்க தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 84 ரயில் சாரதிகள் கடந்த 12ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானதோடு, ரயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்டார்.
மேலும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சாரதிகள் பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அவர்கள் சேவையை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்றைய கலந்துரையாடலின் பின்னர், ரயில் போராட்டத்தை கைவிட தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் ஆகும் போது, ரயில் சேவை வழமைக்கு திரும்பும் என சேனநாயக்க தெரிவித்தார். (News21)