சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் குறையும்... வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!
பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

பல வாகனங்களின் சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் பல மில்லியன் ரூபாய்கள் குறையும் என்ற காரணத்தினால், மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது, கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடக சந்திப்பு ஒன்றில், உரையாற்றிய வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
எனினும், இந்த வாகனங்களின், சந்தை விலை, கொள்வனவு செய்த மாதங்களுக்குள் இரண்டு முதல் மூன்று மில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளன. இது, சீன மின்சார வாகன சந்தையில் நிலவும் விரைவான மாற்றங்கள் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மேம்படுத்தல்களை சீன வாகன தயாரிப்பாளர்கள், வெளியிடுகிறார்கள், இது பழைய மாடல்களின் விரைவான மதிப்பிழப்புக்கு வழிவகுக்கிறது.
ஜப்பானிய வாகனங்களில் அவ்வாறான நிலை இல்லை. சிறிய மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும் நிலையான சந்தை மதிப்பைப் பராமரிக்கிறார்கள் என்றும், வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே கூறியுள்ளார்.
20 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு சீன மின்சார வாகனம், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் அதன் மறுவிற்பனை மதிப்பில், 7 முதல் 8 மில்லியன் ரூபாய் குறையக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.