கிறிஸ்மஸ் சொல்லும் நற்செய்தி! #Christmas
இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
லூக்கா 11-14
பனி படர்ந்த முன்னிரவு. அது பண்டிகைக்காலமாக இருந்ததால் ஊரில் ஒரு சத்திரத்திலும் இடமில்லை. மரியாளுக்கோ நிறை மாத கர்ப்பம். எந்நேரமும் பிரசவம் ஆகிவிடும் சூழல். ஒரு தொழுவத்தில் ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தரின் ஒரே குமாரன் அந்தத் தொழுவத்தில் பிறப்பெடுத்தார்.
கிறிஸ்மஸ்
அந்தக் காட்சியைக் கொஞ்சம் மனக்கண்ணில் நினைத்துப்பாருங்கள். இந்த உலகுக்கு நற்செய்தியைச் சொல்லவந்த அந்த இறைமகன் துணியில் சுற்றப்பட்டு எளிமையாகத் தொழுவத்தின் முன்னணையில் கிடத்தப் பட்டிருக்கிறார்.
இவரின் பிறப்பைத் தேடித்தான் கிழக்கு தேசங்களிலிருந்து சாஸ்திரிகள் வெகுமதிகளோடு வந்திருக்கிறார்கள். தேவதூதர்கள் அங்கிருக்கும் மேய்ப்பர்கள் முன்பு தோன்றி கிறிஸ்து பிறப்பை அறிக்கையிட்டு வாழ்த்துகிறார்கள். இந்த அற்புதத்தை முன்னறிவிக்கத்தான் நட்சத்திரம் வானில் தோன்றி வழி நடத்தியது.
இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு சிறு அதிகாரப் பதவியில் உள்ளவர்கூடத் தன் மகனை எப்படி வாழவைக்கவேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார். குறுக்கு வழியின் மூலமேனும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.
இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது. இயேசு கிறிஸ்து தன் வாழ்க்கையைச் சொல்லும் சுவிசேஷங்களை வாசியுங்கள். அதில் அவர் எப்போதும் எளிய மக்களோடே இருந்தார். மீனவர்களும், கூலிவேலை செய்பவர்களும் நோயாளிகளும் எப்போதும் அவருக்கு அருகே இருந்தார்கள். அவரும் அவர்கள் மீது பிரியமாயிருந்தார்.
எளிமையாக இருந்தது மட்டுமல்ல... ஏழ்மையை உண்டு பண்ணுகிற அதிகாரத்துக்கு எதிரான தன் சொற்சாட்டைகளை எடுத்து வீசி ஆட்சியாளர்களை அதிரவும் செய்தார். ஆன்மிகம் என்பது சடங்கு அல்ல. ஆன்மிகம் என்பது வேண்டுதல்கள் அல்ல. ஆன்மிகம் என்பது பயப்படுவது அல்ல. ஆன்மிகம் என்பது யாரையும் அடக்கி ஒடுக்குவதல்ல என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரைப் பொறுத்த வரை ஆன்மிகம் என்பது அன்பு.
அன்பையே அவர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு போதனையாகச் செய்தார். இந்த உலகின் மக்களுக்கு அவர் இரண்டே எளிமையான கட்டளைகளை முன்வைத்தார்.
“இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை.
‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
நியூஸ்21 வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.