மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
தம்மிடம் உள்ள நிதி அல்லது கடன் பெற்றாவது வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை
பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
“பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நிதிவசதி இல்லாமை காணி பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட ஒரு காரணமாகும்.
இந்த நிலையில், வீடமைப்பு திட்டத்திற்காக நிதி வசதிகள் இல்லாவிட்டாலும் 10 பேர்ச் காணிகளை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தம்மிடம் உள்ள நிதி அல்லது கடன் பெற்றாவது வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவதானத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருகின்றார்.
இதேவேளை, தோட்டத்தில் வேலை இல்லை என்பதற்காக லயன் அறைகளில் இருந்து மக்களை வெளியேற்ற முடியாது.
காணி உரிமம் வழங்கப்படும் பட்சத்தில் கடன் மூலமாகவோ அல்லது வேறு வழிகளில் வீடொன்றை அரசாங்கம் நிர்மாணித்து கொடுக்கும்.
1991ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறையை தனியாருக்கு வழங்கிய போது சுமார் 4இலட்சத்து 50,000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் காணப்பட்டனர். ஆனால், தற்போது 150,000 தொழிலாளர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.
பெருந்தோட்ட துறையை பாதுகாக்க வேண்டுமானால் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
(படங்கள் - Google)