இலங்கையில் அதிகரித்துள்ள யானைகளின் இறப்பு!

 இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

ஜனவரி 4, 2024 - 16:16
இலங்கையில் அதிகரித்துள்ள யானைகளின் இறப்பு!

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த வருடம் (2023) 474 யானைகள் இறந்துள்ளன.

கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் இறந்தன. 

 இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

“சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும் போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது” என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர கூறுகிறார்.

2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன அனால் அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை என்கிறார் அவர். 

மேலும் “49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 மின்சாரம் தாக்கியும் பலியாகின” எனவும் அவர் கூறுகிறார்.

விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தது, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்திற்காக காடுகளை அழித்தது ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.

“அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை”.

சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைக் காண்பது சுலபமான காரியமல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

”யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளை பாதுகாக்க இந்தப் பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது” எனவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர வலியுறுத்தினார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!