மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்
16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை, கல்போத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான பொலிஸாரின் பி அறிக்கையை தாம் பெற்றுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நேற்று (9) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர், தாபன விதிக் கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் வைக்கப்படுவார்.
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் எந்தவொரு தரப்பினரும் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளை புறக்கணித்துள்ளார்களா என்பதைக் கண்டறிய அமைச்சு உள்ளக விசாரணையைத் தொடங்கியுள்ளது.