ஐசிசியால் இலங்கை அணி இடைநீக்கம்... இனி என்ன நடக்கும்?
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொடர்ந்தும் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை எச்சரிப்பதற்காகவே ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இடைநீக்கம் என்று குறிப்பிட்டுள்ளதால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இது உடனடியாக எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
உலகக் கோப்பையில் தனது கடைசி ஆட்டத்தை இலங்கை கிரிக்கெட் அணி வியாழக்கிழமை விளையாடியது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு டிசெம்பர் வரை இலங்கையில் எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வரும் ஜனவரி வரை நிதி ஒதுக்க வேண்டியதில்லை.
விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷன் ரணசிங்க கடந்த திங்கட்கிழமை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கலைத்து உத்தரவிட்டார். முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்காலக் குழுவை நியமித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில், விளையாட்டுத் துறை அமைச்சரின் உத்தரவை 14 நாள்களுக்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைக்கால தடை
ஐசிசியின் காலாண்டு கூட்டம் நவம்பர் 18 முதல் 21 வரை அஹமதாபாதில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து விவாதிப்பதற்காக நேற்று இணையவழியில் ஐசிசி கூடியது.
இந்தக் கூட்டத்திலும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிநிதியாக ஷம்மி சில்வா கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்தது.
நவம்பர் 18 முதல் 21 வரை நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்திலும் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.