2025 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.6% வீழ்ச்சி – பணவீக்கம் 2.1% ஆக நிலைநிறுத்தம்
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய பரிவர்த்தனை தரவுகளின்படி, நேற்று (31) வர்த்தக நாள் முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.29 ரூபாயாகவும், விற்பனை விலை 313.83 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், 2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஒரு ஆண்டில் ரூபாயின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது.
இதற்கிடையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட பணவீக்க விகிதம், 2025 நவம்பர் மாதத்தைப் போலவே டிசெம்பர் மாதத்திலும் 2.1 சதவீதமாக மாற்றமின்றி நிலவுகிறது.
2025 டிசெம்பர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 195.8 ஆக பதிவாகியுள்ளது. இது நவம்பர் மாதத்தில் பதிவான 193.4 சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 2.4 புள்ளிகள் உயர்வாகும்.
உணவுப் பிரிவுக்கான ஆண்டுக்கான பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் இருந்ததைப் போலவே டிசெம்பர் மாதத்திலும் 2.1 சதவீதமாக எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டுள்ளது. அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து, டிசெம்பர் மாதத்தில் 1.8 சதவீதமாக சிறிதளவு உயர்வடைந்துள்ளது.
மேலும், 2025 டிசெம்பர் மாதத்தில் ஆண்டுக்கான மொத்த பணவீக்கத்திற்கு உணவுப் பொருட்கள் 0.97 சதவீத பங்களிப்பையும், உணவு அல்லாத பொருட்கள் 1.18 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

