தொடர் வெற்றிகளை குவித்து வரும் இலங்கை மகளிர் அணி
உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் உகண்டாவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் மகளிர் தகுதிகாண் தொடரில் மூன்றாவது தொடர் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி நேற்று (03) அபுதாபியில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்தது.
விஷ்மி குணரட்ன 64 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார். மறுமுனையில் உகண்டா பந்துவீச்சில் ஜனேட் பாபஸி, முசமலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
155 ஓட்டங்கள் இலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய உகண்டா அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களுடன் தோல்வியினைத் தழுவியது.
உகண்டா அணியின் சாப்பில் ப்ரோஸ்கோவியா அலாஸ்கோ 36 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை அணி வீராங்கனை இனோக்கா ரணவீர, சஷினி கிம்ஹானி மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகியாக விஷ்மி குணரட்ன தெரிவாகியிருந்தார்.