பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட பாதுகாப்பு

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 15, 2025 - 18:26
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நகரங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களை மையமாகக் கொண்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். 

இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.

பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு, பொலிஸ் மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் ஒரு பகுதியாக, மேல் மாகாணத்தில் மாத்திரம் 2,500 மேலதிக பாதுகாப்புப் படையினர் விசேடமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நிகழ்வுகள் தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

இந்த பண்டிகைக் காலத்தில், சிவில் உடையில் பணியாற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வாளர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனுடன், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளும்  பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முழுமையாக தயாராக உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!