கொட்டகலை தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் 6, 2023 - 13:34
கொட்டகலை தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

(அந்துவன்)

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நேற்று (05) இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின்  தீயணைப்பு பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற வேளை உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரே இருந்துள்ளதாகவும், எனினும் அவர்களை எந்தவித காயங்களும் ஏற்படாமல் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீயினால் பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!