புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட விபத்துகளில் சிறுவன் உட்பட 7 பேர் பலி
நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், கைகலப்பு மற்றும் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், கைகலப்பு மற்றும் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபம், மாதம்பை வெல்லராவ சந்தியில் நேற்று (14) வியாழக்கிழமை குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 39 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரகல வாவியில் நீராடிகொண்டிருந்த 65 வயதான நபரொருவர் நேற்று (14) மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, இறக்குவானை பொலிஸ் பிரிவில், இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய வீதியில் நேற்று (14) இடம்பெற்ற வீதி விபத்தில். 48 வயதானவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் வந்த லொறி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், ஹொரனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரனை- தல்காவ வீதியில், பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 61 வயதானவர் மரணமடைந்துள்ளார்.
மேலும், கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு- கண்டி பங்களாவீதி எனுமிடத்தில், மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்படுத்த முடியாமையால், மின்சார கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கடவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதானவர் உயிரிழ்ந்துள்ளார்.
இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவில், லொறியொன்று எதிர்திசையில் பயணித்த ஓட்டோ ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டோவில் பயணித்த மூவர் காயமடைந்தனர். அதில், ஓட்டோ சாரதி மரணமடைந்துள்ளார்.
அத்தனகல பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளொன்று மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 34 வயதான நபர் மரணமடைந்தார்.
அத்துடன், தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அநுராதபுர-பாதணி எனுமிடத்தில், பாதசாரி கடவைக்கு அருகில், மோட்டார் சைக்கிளொன்று திரும்புவதற்கு முற்பட்டபோது, எதிர்திசையில் பயணித்த காரொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். அதில், 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க, குருநாகல்- தம்புள்ளை வீதியில் லொறியும் டிப்பர் மோதி விபத்துள்ளானது. லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.