கொழும்பில் 'மலையக தமிழர்களின் வேரூன்றிய வரலாறுகள்' கண்காட்சி
இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமத்தினால் (CHDM) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மலையக தமிழர்களின் வேரூன்றிய வரலாறுகள்' கண்காட்சி, கொழும்பு பொது நூலகத்தில் நாளை (18) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை, மு.ப. 9.00 மணி தொடக்கம் பி.ப. 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
ஞாயிறன்று 20ஆம் திகதி, கண்காட்சியானது பி.ப. 1.00 மணி தொடக்கம் பி.ப. 6.00 மணி வரை நடைபெறும்.
சமூக அபிவிருத்திக்கான நிறுவகத்துடன் (ISD) இணைந்து நடத்தப்படும் இக்கண்காட்சி, இலங்கையில் பிரதானமாகப் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து மலையகத் தமிழர்கள் வருகை தந்ததில் இருந்து தொடங்கி அவர்களின் முக்கியமான வரலாற்று ரீதியான தொனிப்பொருட்களை, அவர்களின் அரசியல் நிகழ்வுகள், போராட்டங்கள் மற்றும் அதனூடாக அவர்கள் அடைந்துகொண்டவற்றை தடம் கண்டு செல்கின்றது. இவை அனைத்துமே அச்சமுதாயத்தின் வரலாறுகளை வரையறுக்கும்.
இலங்கையில் மலையகத் தமிழ்ச் சமுதாயத்தின் 200 வருட வரலாற்றினை நினைவுகூரும் இக்கண்காட்சி, இச்சமுதாயத்தின் கடந்த காலம் பற்றியும் நிகழ் காலம் பற்றியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த நாடுவதுடன், ஓரங்கட்டப்பட்ட வரலாறுகளை உண்மையென ஏற்று அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தினையும் கோடிட்டுக்காட்ட நாடுகின்றது.
பொது வரலாறுகளையும் தனிப்பட்ட வரலாறுகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் இக் கண்காட்சி, மலையக சமுதாயம் தாங்கிக்கொண்ட முறைமை வாய்ந்த பாகுபாட்டினை உண்மையென ஏற்றுக்கொள்வது தொடர்பாகக் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக, ,லங்கைப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படுவதற்கான மற்றும் அடையாளம் காணப்படுவதற்கான இச்சமுதாயத்தின் போராட்டத்திலும் கவனம் செலுத்துகிறது.
மலையக சமுதாயத்தினரின் வருகை மற்றும் அவர்களின் காலனித்துவக் கால வரலாறுகளினதும் சுதந்திரத்திற்குப் பின்னரான கால வரலாறுகளினதும் தடங்களைத் தேடும் விதமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கம்பளையிலுள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகமும் ஆவணகாப்பகத்திலிருந்தும் இதர மூலங்களிலிருந்தும் கண்காட்சிக்காக பெறப்பட்ட, இச்சமுதாயத்தின் வரலாற்றுக்கு முக்கியமான தொல்பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்படும்.
அத்துடன், ஓடியோ, வீடியோக்கள் மற்றும் ஏனைய காட்சி மூலங்களும் காட்சிப்படுத்தப்படும். பொதுமக்களையும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வரலாற்று ஆர்வலர்களையும் இக்காண்காட்சி இலக்காகக் கொண்டுள்ளது.
இக்கண்காட்சியானது ஆரம்பத்தில் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சமூக அபிவிருத்திக்கான நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மலையகம் 200 எனும் பாரிய நிகழ்வின் ஓர் அங்கமாக 2023 மே மாதத்தில் நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியின் சில பகுதிகள், ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தொழிலாளர்கள் மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.