தோனிக்கு டஃப் கொடுக்கும் ரிங்கு சிங்.. மிரள வைக்கும் புள்ளி விபரம்!
இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங்கின் சில புள்ளி விபரங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங்கின் சில புள்ளி விபரங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சேர்ந்து 76 பந்துகளில் 137 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து அபிஷேக் சர்மா 47 பந்தில் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ருதுராஜ் மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்து போட்டியை முடித்து வைக்கும் வேலையைச் சிறப்பாக செய்தார்கள்.
இந்த ஜோடி இறுதி வரையில் ஆட்டம் இழக்காமல் வெறும் 36 பந்துகளில் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 234 ரன்கள் குறித்தது.
இந்த போட்டியில் ரிங்கு சிங் 22 பந்துகள் மட்டுமே சந்தித்து 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் அதிரடியாக எடுத்தார். முதல் போட்டியில் அவர் ரன்கள் ஏதும் இல்லாமல் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்து இருந்தது பெரிய விமர்சனத்தை உருவாக்கி இருந்தது.
ரிங்கு சிங் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி இரண்டு ஓவர்களில் 48 பந்துகளை சந்தித்து 17 சிக்ஸர்கள் எடுத்திருக்கிறார்.
ஏறக்குறைய மூன்று பந்தில் ஒரு சிக்ஸர் வீதம் அடித்திருக்கிறார். அவர் ஒரு ஓவரின் ஆறு பந்தையும் சந்தித்தால் இரண்டு சிக்ஸர்கள் அடிப்பார்கள் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய வீரர்கள் அடித்த சிக்ஸர்
ஹர்திக் பாண்டியா – 32 சிக்ஸர் – 193 பந்துகள்
விராட் கோலி – 24 சிக்ஸர்கள் – 158 பந்துகள்
தோனி – 19 சிக்ஸர்கள் – 258 பந்துகள்
ரிங்கு சிங் – 17 சிக்ஸர்கள் – 48 பந்துகள்