அரச சேவையில் ஆட்குறைப்பு? உண்மை என்ன?
அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவையை விட அரசியல் தேவைக்காக செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தி இருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அரச சேவையில் மக்களை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே தமது எதிர்ப்பார்ப்பாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.