நிபா வைரஸ் எச்சரிக்கை - அறிகுறி மற்றும் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
நிபா வைரஸ் எச்சரிக்கை: கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நிபா வைரஸ் எச்சரிக்கை
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வைரஸ் வௌவாலிடம் இருந்து மக்களுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து வைரஸ் பாதிப்பில் இருந்து மீள கேளர மாநிலமே போராடியது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் கேரள மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் மலப்புரம் மாவட்டத்தில் 14வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநில அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், கட்டுப்படுத்த போர்கால நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் அறிகுறி என்ன.?
இந்தநிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நிபா வைரஸ் காய்ச்சலுக்கு அறிகுறியாக தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்களிடம் இருந்து ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முறை என்ன?
மேலும் பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.