இளைய தலைமுறையினரே இலங்கையின் எதிர்கால வழிகாட்டி - ஜனாதிபதியின்  சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

ஒக்டோபர் 1, 2023 - 14:01
இளைய தலைமுறையினரே இலங்கையின் எதிர்கால வழிகாட்டி - ஜனாதிபதியின்  சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

இளைய தலைமுறையினரே இலங்கையின் எதிர்கால வழிகாட்டிகள் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து வருகின்றோம்.

மேலும், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். 

அதற்கேற்றவாறு சிறுவர்களை, புதிய தொழில்நுட்ப அறிவு, செயற்திறன்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமநிலையான ஆளுமை கொண்ட,  பயன்மிக்க பிரஜைகளாக சமூகமயமாக்க கல்வி முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அபிவிருத்தியடைந்த இலங்கையின் பெருமைக்குரிய பங்காளர்களாக இன்றைய தினம் தமது கல்வி நடவடிக்கைகளில் உரிய முறையில் ஈடுபட்டுத் தேவையான அறிவைப் பெறுவதற்கு நாட்டின் சகல பிள்ளைகளும் தங்களை அர்ப்பணிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

மேலும், உலகெங்கிலும் காலங்காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் மதிப்புமிக்க நற்பண்புகளைப் பிரதிபலிப்பதன் மூலம் இலங்கைப் பிரஜைகளாகிய நாம் சர்வதேச முதியோர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை நினைவுகூர்ந்து, அனைவருக்கும் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!