பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி கொழும்பு நகரை அழகுபடுத்த திட்டம்!

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பேர வாவி  அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

டிசம்பர் 5, 2023 - 20:36
பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி கொழும்பு நகரை அழகுபடுத்த திட்டம்!

கொழும்பு, கங்காராம, பேர வாவி  அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை உடனடியாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவன பிரதானிகளுக்கு  சாகல ரத்நாயக்க அறிவித்தார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பேர வாவி  அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பேர வாவியை அண்டியதாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அபிவிருத்தி செய்து பயன்படுத்தக் கூடிய, அடையாளம் காணப்பட்ட காணிகளின் அபிவிருத்தி மற்றும் தனியார் பங்கேற்புடன் பேர வாவியை அபிவிருத்தி செய்தல் உட்பட  பேர வாவிக்கு  திருப்பி விடப்படும் கழிவுநீர் குழாய்களைத் தடுத்தல்  மற்றும்  வாவியில்  உள்ள பாக்டீரியா மற்றும் பாசிகளின் அளவை குறைத்தல் உள்ளிட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

03 இடங்களில் அமைந்துள்ள மத்திய பஸ் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பஸ் நிலையம் அமைந்துள்ள காணியை தனியார் துறையினருடன் இணைந்து வர்த்தக செயற்பாடுகளுக்காக  அபிவிருத்தி செய்தல், கொழும்பு நகரிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி, பொருத்தமான மரங்களை நடல்,  கொழும்பு நகரில் உள்ள கைவிடப்பட்டு, காடாக மாறியுள்ள கட்டிடங்களை அடையாளம் கண்டு பராமரித்தல், கொழும்பு நகர போக்குவரத்து, பயணிகளை ஏற்றிச் செல்வது மற்றும் இறக்குவது தொடர்பான ஒழுங்குமுறைத் திட்டத்தைத் தயாரித்தல், மழைநீர் முறையாக  வடிந்து செல்வதற்கு  முன்னெடுத்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதையும் படிங்க : கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு

அத்துடன், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கும், முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை பொலிஸ், கொழும்பு மாநகர சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!