அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!

பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மே 8, 2025 - 15:33
மே 8, 2025 - 16:00
அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் தனது உயிரை மாய்த்த மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி, மாணவி கல்வி கற்ற பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் இன்று (08) அமைதியாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றும் பாதிக்கப்பட்ட தரப்பில் கையளிக்கப்படவுள்ளது. 

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்தக் கண்டன போரணி, கொட்டாஞ்சேனை வரை செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து  தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதனையடுத்து, கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அத்துடன், உயிரிழந்த மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து பாடசாலைக்கு முன்னாள் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு, மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, “இறுதி வரை போராடுவோம்”, “வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்” மற்றும் “எங்கள் பிள்ளை” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் உணர்வுபூர்வமாக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு பொதுமக்கள் இதன்போது செருப்பால் அடித்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!