சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து வீரர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷாகீப் மஹ்மூத் வீசிய இரண்டாவது ஓவரில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ரிங்கு சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அபிஷேக் சர்மா 29 ரன்னிலும், ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை பறக்கவிட ஸ்கோர் வேகமும் உயரத்தொடங்கியது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஷிவம் தூபேவும் 53 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டனாக வீசியும் அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், அந்த ஓவரை மெய்டனாக வீசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை சாகீப் மஹ்முத் படைத்துள்ளார்.